search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ மாணவர்கள்"

    கொரோனா தொற்று உறுதியான மாணவர்கள் அவர்கள் தங்கும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் யஷ்வந்த் மதநிக்கர் தெரிவித்துள்ளார்.
    தர்வாத்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும், மூன்றாம் அலைக்கு வாய்ப்பு உள்ளதால், பொது மக்கள் கூட்டம் சேரும் இடங்களில் தனி நபர் இடைவெளி, கட்டாயம் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.

    ஆனால், பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அலட்சியமாக சுற்றி வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் 66 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பின்னர், சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

    தொடர்ந்து, அவர்களுடன் இருந்த மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்டுள்ளனர்.

    இதையடுத்து, மாணவர்களை அவர்கள் தங்கும் விடுதியிலேயே தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் யஷ்வந்த் மதநிக்கர் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, வெளியாட்கள் கல்லூரிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்..  தெலுங்கானா சபாநாயகர் போச்சரம் ஸ்ரீநிவாஸ் ரெட்டிக்கு கொரோனா தொற்று
    மருத்துவ மாணவர்கள் கல்வி கட்டண உயர்வுக்கு புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் வாழும் ஏழை, எளிய, அடித்தளத்து மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டும் என்ற நோக்கில், தி.மு.க. ஆட்சியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டது.

    மேலும், மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்கள் அரசு பங்காக அளிக்க வேண்டும் என்ற உடன் படிக்கையின்படி தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஒதுக்கீடு முழுமையாக பெறப்பட்டு மாணவர்கள் பலன் பெற்றனர்.

    ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் 50 சதவீதம் என்ற மாணவர் சேர்க்கை உடன்பாட்டை கைவிட்டு விட்டனர். இதனால், அரசு ஒதுக்கீடு 25 சதவீதத்திற்கும் குறைந்து இன்றைக்கு கேவலமான நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளனர். இதற்காக மறைமுகமாக தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் பலன் பெற்று மாணவர்களை வஞ்சித்துள்ளனர்.

    ஆரம்பத்தில் சில ஆயிரமாக இருந்த கல்வி கட்டணம் இன்று பல லட்சங்களை தாண்டியுள்ளது. சென்டாக் மூலம் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. மறுபுறம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களை வகுப்புக்களை புறக்கணித்து போராடுகின்ற நிலைமைக்கு இந்த அரசு தள்ளி உள்ளது.

    இத்துடன் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களையும் இந்த அரசு விட்டு வைக்கவில்லை. சென்ற கல்வி ஆண்டில் (2017-18) ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு கல்வி கட்டணமாக ரூ. 12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாண்டு (2018-19) நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணக் குழு வருகின்ற ஆண்டுகளுக்கான கட்டணமாக ரூ. 16 லட்சம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    கடந்த கல்வியாண்டு முதல் இந்த அறிவிப்பு அமலாகும் என்றும் அறிவித்துள்ளது இது முரண்பாடானதாகும். சென்ற ஆண்டு கட்டணக்குழு எடுத்த நிலைபாட்டிற்கு விரோதமாக இவ்வாண்டு குழுவின் முடிவு அமைந்துள்ளது. இது மாணவர்களுக்கு சுமையை ஏற்றுவதாகவும், தனியார் கல்லூரிகளுக்கு சாதகமான அம்சமாகவும் அமைந்துள்ளது.

    சிறிய மாநிலமான புதுவையில் இத்தனை தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதின் அடிப்படை காரணம் புதுவையில் அதிக மருத்துவர்களை குறைந்த செலவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கமே ஆகும். ஆனால் தொடர்ந்து மருத்துவ மாணவர்களின் பிரச்சினை பூதாகரமாக மாறி வருகிறது. தனியார் நிறுவனங்களும், அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து பணம் கறக்கும் கருவியாக இந்த மருத்துவக் கல்வியை மாற்றி அமைத்து இருப்பதும், இதனால் மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதும், இந்த ஆட்சிக்கு துணை நிற்கின்ற தி.மு.க.வால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஆகவே முதல்வர் தலையிட்டு இதுபற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டு மருத்துவ மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வு காணவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதே நிலை தொடருமானால் மக்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைத்து மக்கள் விரோத போக்கை எதிர்த்து போராடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


    ×